Search This Blog

Saturday 22 May 2010

நாட்டில் பொறுப்பான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் அமைவதற்கு எழுச்சிமிக்க இளைஞர்கள் தேவை! அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்.


நாட்டில் பொறுப்பான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் அமைவதற்கு எழுச்சிமிக்க இளைஞர்கள் தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.



மதுரையில் ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பக்தர்களின் 18-வது மாநாட்டின் அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலாம் பேசுகையில், மேற்கு வங்கத்தில் 1836-ல் பிறந்த ராமகிருஷ்ணர், ஞான ஒளிபெற்று அறிவுதாகம் கொண்ட இளைஞர்களை உருவாக்கி, அவர்களில் முதன்மைச் சீடராக விவேகானந்தரைத் தேர்ந்தெடுத்தார்.
இளைஞர்களைப் பண்படுத்தி, அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ராமகிருஷ்ண மடம் ஈடுபட்டு வருவது மகத்தான பணியாகும்.

நம் நாட்டில் உள்ள 54 கோடி இளைஞர்களே நமக்கு மிகப்பெரிய சொத்து. இன்றைய சவால்களை சந்திக்கும் அளவுக்கு இளைய சமுதாயம் கண்டிப்பாக எழுச்சி பெறவேண்டும்.

தற்போது வறுமை, கவனச் சிதறல், வேலைக்கேற்ற படிப்பும், பயிற்சியும் இல்லாத சூழல், உலகமயமாக்கலினால் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாசார மாற்றம் இளைஞர்களை வேகமாக மாற்றிவிடும் சூழல் நிலவுகிறது.

இந்தத் தடைகள் அனைத்தையும் தாண்டி, காலத்துக்கு ஏற்றவாறு நம்மை நாம் மாற்றிக்கொண்டு, நமது முகவரியை இழக்காமல் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்தியா 2020-ல் வளர்ந்த நாடாக - வல்லரசாக மாறவேண்டும் என்பதே நமது லட்சியம். இதை அடைய வேண்டுமானால் 54 கோடி இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் அனைத்துத் துறையிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களை நாம் தயார்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராயும் திறனை வளர்க்க வேண்டும். 90 சதவீதம் பேர் படிப்பின் பல நிலைகளில் கல்வி கற்க இயலாமல் வேலைகளுக்கு செல்கின்றனர்.

நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தால்தான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற முடியும். ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி குறைய வேண்டும், சுத்தமான குடிநீர், எரிசக்தி, தரமான கல்வி, மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விவசாயம், தொழில், சேவைத் துறைகள் முன்னேற வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொறுப்பான - வெளிப்படையான - ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் அமைய வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் எழுச்சிமிக்க இளைஞர்கள் தேவை. ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரின் கனவும் இதுதான்," என்றார் அப்துல் கலாம்.

No comments: