'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' - இது மகாகவி பாரதி கண்ட கனவு! அந்த நோக்கத் துக்காகத்தான் இப்போது கொங்கு மண்டலத்தில் தமிழ் பொங்கப் போகிறது! ''தமிழ் மொழி பெற்றிருக்கும் சொற்செல்வங்களும் செந்தமிழ் மொழியின் பல்வேறு வகைப்பட்ட இலக்கண வடிவங்களும் அம்மொழியின் பழைமையை நிலைநாட்டும் நல்ல சான்றுகள் ஆகும்'' - என்று சொன்ன வன் தமிழனல்ல; கால்டுவெல்! ''தமிழ் போன்ற திராவிட மொழியை நன்றாகக் கற்ற ஐரோப்பியர் ஒருவர், அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்களினத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது'' - என்று சொன்னவனும் தமிழனல்ல; ஜி.யு.போப்! ''மனிதரால் பேசக்கூடிய செம்மை செய்யப் பெற்ற தூய்மையான மொழி களுள் தமிழும் ஒன்று'' - என்று கண்டுபிடித்தவர் தாய்லர்! ''திராவிட மொழிகளில் துல்லியமாக, சரியாக சிந்திப்பதற்குத் தகுந்த பொருத்தமான மொழி தமிழாகும்'' என்று வரையறுத்தார் டாக்டர் ஸ்லேட்டர்! இப்படி உலக ஆய்வாளர்களால் உச்சிமுகர்ந்து போற்றப்பட்ட தமிழுக்கு, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக நடக்கிறது! இதுவரை எட்டு முறை உலகத் தமிழ் மாநாடுகள் நடந்திருக்கின்றன. இரண்டின் நோக்கமும் ஒன்று என்பதால் அதன் தொடர்ச்சியாகவே இந்த ஒன்பதாம் மாநாட்டையும் பார்க்கலாம்! தனிநாயகம் அடிகளாரின் தனி அடித்தளம்! உலகத் தமிழ் மாநாடுகளுக்கு தனியரு மனிதனாக நின்று கால்கோள் விழா நடத்தியவர் தனிநாயகம் அடிகளார். மதுரையில், ''இந்த நவீன கால கட்டத்தில் மற்ற ஐரோப்பிய மொழிகளுக்கு ஈடாகத் தமிழ் மொழியும் வளர்ச்சி பெற்றாக வேண்டும். ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத் தமிழ் துறைத் தலைவர்களை ஒன்றுகூட்டி தமிழ் மொழி ஆய்வுத் திட்டங்களை வகுத்தால்தான் தமிழை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல முடியும்!'' என்றார் அவர். ஈழத்தில் பிறந்த அவர் வசித்தது மலேசியாவில்! அந்தக் காலத்தில் மலேசியாவில் 'இந்தியக் கல்வி மன்றம்' என்ற அமைப்பு இருந்தது. அதன் தலைவராக டாண்ஸ்ரீ மாணிக்க வாசகம் இருந்தார். இருவரும் இணைந்து மலேயா பல்கலைக்கழக நிதி உதவியுடன் மலேசியாவில் அனைத்து மொழி அறிஞர்கள் மாநாட்டை நடத்தினர். அங்கு உருவானதுதான் 'உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்'. தனிநாயகம் அடிகளார், செக்கோஸ்லோவியா நாட்டுத் தமிழ் அறிஞர் டாக்டர் கமில் சுவலபில், அறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் கலந்துகொண்ட குழு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தியது. பேராசிரியர் ஜான் பில்லியோசாட் இதன் தலைவராகவும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் பாரோவ், பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் இமானுவேல், லெய்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கியூபெர்க், மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சென்னைப் பல்கலைக்கழப் பேராசிரியர் மு.வரதராசனார் ஆகியோர் இதன் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தனிநாயகம் அடிகளும் கமில் சுவலபிலும் செயலாளர்களாக இருந்தனர். முதலாவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. மாநாட்டுப் பொருளா ளராக சுப்பை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழுக்கு உலகளாவிய அளவில் மாநாடு நடத்தியாக வேண்டும் என்ற முடிவின் தொடக்கமாக அது அமைந்தது! கோலாலம்பூர்! கோலாலம்பூரில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் 23 வரை முதலாவது உலகத் தமிழ் மாநாடு நடந்தது. மலேசியப் பல்கலைக்கழகம், தேசிய இந்தியக் கல்வி வளர்ப்பு மன்றம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய மாநாடு அது. அன்றைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 25 நாடுகளில் இருந்து மாநாட்டுக்கு அறிஞர்கள் வந்தனர். இந்த நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி! எம்.பக்தவசலம் முதலமைச்சராக இருந்தார். மாநாடு தொடர்பான அறிவிப்புக் கிடைத்ததுமே, 'அந்த மாநாட்டில் நிச்சயம் கலந்துகொள்வேன்' என்று அறிவித்ததோடு, அரசு செலவிலேயே சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அ.ச.ஞானசம்பந்தன், கல்வித் துறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு உள்ளிட்டோரை மாநாட்டுக்கு அனுப்பிவைத்தார். மொத்தம் 21 நாடுகளைச் சேர்ந்த 172 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். 46 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டன. தனிநாயகம் அடிகள், ''இங்கு படிக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் அடுத்த மாநாட்டின்போது புத்தகமாக வெளியிட வேண்டும்'' என்றார். சென்னை! 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை முரசறைந்து இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1968-ம் ஆண்டு ஜனவரி 4 முதல் 8 வரை நடந்தது. அப்போது தமிழக முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். ஆய்வாளர்கள் மட்டும் கலந்துகொள்ளும் ஆய்வு மாநாடாக இல்லாமல்... தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் விழாவாக இது திகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'மொழியை ஜனநாயகப்படுத்தாமல் அதை வளர்க்க முடியாது' என்ற நோக்கம்கொண்டவர் அண்ணா. சென்னைக் கடற்கரையில் ஒளவை, திருவள்ளுவர், கம்பர், பாரதி, பாரதிதாசன், ஜி.யு.போப், வீரமாமுனிவர், கால்டுவெல், கண்ணகி, வ.உ.சிதம்பரனார் ஆகிய பெருமக்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டன. ''10 சிலை வைத்ததனால் என் அண்ணனுக்கு தமிழ் மீதுள்ள பற்றுதலால், அந்த அண்ணனுக்கு நாங்கள் ஒரு சிலைவைத்தோம்'' என்று கருணாநிதி கவிதை பாட... அண்ணாவுக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டது. மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இன்றைய முதல்வர் கருணாநிதியின் ஒத்துழைப்போடு அமரர் எஸ்.எஸ்.வாசன் அந்த ஊர்வலத்துக்கென உருவாக்கிய பிரமாண்டத் தயாரிப்புகள் மாநாட்டுக்குத் தனி அழகு சேர்த்தன. மாநாட்டில் அண்ணா, ''நமது தமிழ்மொழி தொன்மைமிக்கது. மென்மைமிக்கது. தானும் வாழ்ந்து பிற மொழிகளையும் வாழவைத்தது தமிழ். உலகில் மொழி அறிவு தோன்றியிராத காலத்தில் இலக்கியமும் இலக்கணமும் பெற்றிருந்தது தமிழ். அத்தகைய தமிழுக்கு வலிவும் பொலிவும் இந்த மாநாட்டி னால் கிட்டும் என்பதில் ஐயம் இல்லை'' என்றார். மாநாட்டில் மொழியியல் தொடங்கி தொல்லியல் வரை கருத்தரங்கங்கள் நடந்தன. உலகத் தமிழ் மாநாட்டு இலச்சினையைக்கொண்ட அஞ்சல்தலையை மத்திய அரசு வெளியிட்டது. மாநாட்டு நிறைவில் அண்ணா, ''மொழியைக் கருவியாக நினைக்காமல், தங்களை வழிநடத்தும் துணைவன், வழிகாட்டி, ஆசான், நண்பன் என்று தமிழன் நினைக்கிறான். அதனால்தான் தமிழுக்கு ஆபத்து என்றபோதெல்லாம் ஆர்த்தெழுகின்றான். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும்'' என்றார் முத்தாய்ப்பாக! பாரீஸ்! மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீஸில் 1970-ம் ஆண்டு ஜூலை 15 முதல் 18 வரை மூன்று நாட்கள் நடந்தது. ஓர் இந்திய மொழிக்கான மாநாடு, மேற்கு உலகில் நடப்பது அதுவே முதல் முறை. இம்மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தின. பேராசிரியர் பில்லியோசா தலைமை ஏற்றார். 39 நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து 18 பேர்கொண்ட குழு பாரீஸ் சென்றிருந்தது. அன்றைய நிதி அமைச்சர் மதியழகன், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் கருத்திருமன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் பரூக் மரைக்காயர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, உள்ளிட்டோர் அதில் இணைந்திருந்தனர். இதில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, ''இந்த மாநாடு மூன்று பணிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலம் - தமிழ் நவீன அகராதி ஒன்றை உருவாக்க வேண்டும்; தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே மாணவர்கள் பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; உலகில் பல்வேறு நாடுகளிலும் தமிழைப் பரப்பவும் வளர்க்கவும் வேண்டும். இதற்கான பணிகளை தமிழக அரசும் உங்களுடன் இணைந்து செய்யும்'' என்றார். புதுமைக்குப் புதுமையாக தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இம்மாநாடு நடைபெற்ற காலகட்டத்தில் பிரெஞ்சுக் கல்லூரியின் இணைப் பேராசிரியராக தனிநாயகம் அடிகளார் பணியாற்றியதால், அவரது முழு ஈடுபாடும் அதற்குக் கிடைத்தது. அடுத்த மாநாடு 1973-ம் ஆண்டு இலங்கையில் நடக்கும் என்று அப்போது அடிகள் அறிவித்தார். யாழ்ப்பாணம்! யாழ்ப்பாணத்தில் தமிழ் மாநாடு நடத்துவது சாதாரணமா என்ன? அறிவிப்பைத் தொடர்ந்து சர்சைகளும் முளைத்தன. 'கொழும்புவில் மாநாட்டை நடத்தினால் மட்டுமே ஒத்துழைப்போம்' என்று அந்த காலத்திலேயே வக்கிரத்தைக் காட்டியது இலங்கை அரசு. ஆனால், யாழ்ப்பாணத்தில் நடத்துவதில் தமிழ் ஆர்வலர்கள் உறுதியாக இருந்தார்கள். வெளிநாட்டில் இருந்து மாநாட்டுக்கு வரும் அறிஞர்களுக்கு விசா கொடுப்பதிலும் இழுபறி ஏற்பட்டது. இது பிரதமராக இருந்த பண்டாரநாயகாவின் கவனத்துக்குப் போனது. அவர் தனது அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் நிலையை உணர்ந்து, யாழ்ப்பாணத்தில் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினார். இந்தத் தடைகளால், குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி 1974-ம் ஆண்டுதான் மாநாடு நடத்தப்பட்டது. பேராசிரியர் வித்தியானந்தன், தனிநாயகம் அடிகள், எஸ்.அம்பிகை பாலன், திருமதி திருச்செல்வன், ஜேம்ஸ்.டி.ரத்தினம் ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடு களைச் செய்தார்கள். 20 நாடுகளில் இருந்து 175 அறிஞர்கள் கலந்துகொண்டனர். ஏழு நாட்கள் நடந்த இம்மாநாட்டுக்கு இலங்கை அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ யாரும் வரவில்லை. யாழ்ப்பாணம் என்னவோ தன்னிகரில்லாத் தமிழ்ப் பெருமக்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது. வந்திருந்த அறிஞர்களை, யாழ் தமிழர்கள் தங்களது வீடுகளுக்கு அழைத்து பெருமையோடு விருந்தோம்பினர். 1974-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி 9-ம் தேதி முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளன்று மிகப் பெரிய ஊர்லவம் நடத்தப்பட்டது. தமிழ் வளர்த்த அறிஞர்களான ஆறுமுகநாவலர், விபுலானந்த அடிகள், சுவாமிநல்லூர் ஞானப்பிரகாசர் ஆகியோரது சிலைகள் திறந்துவைக்கப்பட்டன. நிறைவு நாள்... திறந்த வெளி மேடையில் மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று மைதானத்தின் வாசல் கதவுகள் பூட்டப்பட்டன. யாழ்ப்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பாவின் அனுமதிக்காக அலைந்தார்கள். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னதாக ஒரு மேடை அமைக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் கூடியிருக்க... இரவு 8.30 மணிக்கு பேராசிரியர் நயினார் முகமது பேசிக்கொண்டு இருந்தார். அப்போது காவல் துறையினர் உள்ளே புகுந்து வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. ஆராய்ச்சி மாநாடு, ஏழு தமிழர்கள் ஆயுள் பறிபோன சோகத்தோடு நிறைவடைந்தது! மதுரை! ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 1981-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4 முதல் 10 வரை மதுரையில் முன்னின்று நடத்தினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு இதில் அதிகம். முதலில் இம்மாநாட்டை மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டில்தான் நடத்தத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் ஆர்வம்தான் அதை மதுரைக்குக் கொண்டுவந்தது. சேர, சோழ, பாண்டியர் களின் கொடியான வில், புலி, கயல் சின்னங்களை மாநாட்டு இலச்சினையாக அவர் அறிவித்தார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழக அரங்கத்தில் கருத்தரங்குகள் நடந்தன. அன்றைய தமிழக ஆளுநர் சாதிக் அலி மாநாட்டைத் தொடங்கிவைக்க, முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் பக்தவச் சலமும், இலங்கை அமைச்சர்களான தொண்டைமான், ராஜதுரையும் கலந்து கொண்டனர். கவியரசு கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. மதுரையைச் சுற்றிலும் திருவள்ளுவர், தொல்காப்பியர், தத்துவபோதக சுவாமிகள், மதுரை தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித் துரை, கவிமணி தேசிக விநாயகர், உ.வே.சா, திரு.வி.க., ஆறுமுக நாவலர், சோமசுந்தர பாரதி, வேதநாயகனார், தனிநாயகம் அடிகள், வீரமாமுனிவர், மன்னர் திருமலை, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலைகள் அமைக்கப்பட்டன. 'குமரிக் கண்டம்' என்ற சிறப்புத் திரைப்படம் இதற்காகவே எடுக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டார். ''போதுமான வாய்ப்பு கிடைக்குமானால் நானும் தமிழ் படிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு அதிகரித்து வருகிறது. தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்கும் அதே நேரத்தில், நாம் எல்லாம் ஒரு குடும்பத்தார் என்பதையும் மறந்துவிட வேண்டாம்!'' என்றார் இந்திரா. 'தமிழ் மொழி வளர்ச்சிக்கென தஞ்சை பல்கலைக்கழகமும் மதுரையில் உலகத் தமிழ் சங்கம் ஒன்றும் அமைக் கப்படும்' என்றார் எம்.ஜி.ஆர். கோலாலம்பூர்! முதலாம் உலகத் தமிழ் மாநாடு நடந்த கோலாலம்பூரில்தான் ஆறாவது மாநாடும் நடந்தது. 1988-ம் ஆண்டு நவம்பர் 15-ம் நாள் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு தலைமை தாங்க.... மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மாநாட்டைத் தொடங்கிவைத்தார். துவக்க விழாவில் கருணாநிதி கலந்துகொண்டார். கருத்தரங்குகள் அனைத்தும் மலேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. மொழியியல், இலக்கியம், சமுதாயம், பண்பாடு தொடர்பாக 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர். கவிஞர் சுரதா, பேராசிரியர் தமிழ்க்குடிமகன் ஆகியோர் கவியரங்கம் நடத்தினர். அப்போது கவர்னர் ஆட்சி நடந்ததாலோ என்னவோ, உலகத் தமிழறிஞர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. தமிழகத்தில் இருந்து செல்வதாக இருந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் செல்லவில்லை. அரசு சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை. அதையும் மீறி சிலர் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தார்கள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, மதுரை ஆதீனம், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். அடுத்த மாநாடு மொரீஷியஸில் நடக்கும் என்று அங்கு முடிவெடுக்கப்பட்டது! மொரீஷியஸ்! மொரீஷியஸில் குறைவான அளவிலே தமிழர்கள் இருந் தாலும் அவர்களது தமிழ் ஆர்வத்துக்கு நன்றி காட்டும் விதமாகவே அங்கு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 3 முதல் 8 வரை ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம் - அந்நாட்டின் தலைநகரான போர்ட் லூயி. மொரீஷியஸ் நாட்டுப் பிரதமர் அனெரூட் ஜக்நாத், கவர்னர் ஜெனரல் சர்.வீராசாமி ரிங்கார்டு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 150 அறிஞர்கள் வந்திருந்தனர். ''மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற இந்த 21 ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை...'' என்றார் பிரதமர். மாநாடு வெற்றி பெற தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு. இந்திய அரசு, தனது சார்பில் ஒரு கோடி ரூபாயை வழங்கியது. தமிழ்ப் பண்பாட்டுச் செயலாளர் அவ்வை நடராஜன் தலைமையிலான குழுவும் இங்கு வந்திருந்தது. 81 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. 10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள், இசைக் கருவிகள், குத்து விளக்குகளை தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிவைத்திருந்தார். தமிழகத்தோடு பெரிய தொடர்புகள் இல்லாமல் வாழ்ந்து வந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்து வதாகவும் இம்மாநாடு அமைந்திருந்தது. தஞ்சை! எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சையில் 1995-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடத்தினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடக்கும் உலகத் தமிழ் மாநாடு அது. உண்மையில், மொரீஷியஸில் எடுக்கப்பட்ட முடிவின்படி இம்மாநாடு லண்டனில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் ஆசைப்படி தமிழகத்தில் நடந்தது. '21-ம் நூற்றாண்டுக்கு தமிழ்ப் பண்பாட்டின் நன்கொடை' என்ற குறிக்கோளுடன் இம்மாநாடு நடத்தப்பட்டது. தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தொடக்க விழா நடந்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் நொபரு கரோஷிமா விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா விழாவைத் தொடங்கிவைத்தார். தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் வீர வரலாற்றை விளக்கும் ஒலி - ஒளி கண்காட்சி நடந்தது. வீர விளையாட்டுகள் நடந்தன. மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொண்டார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர். | |
|
Search This Blog
Friday, 25 June 2010
கோலாலம்பூர்! சென்னை! பாரீஸ்! யாழ்ப்பாணம்! மதுரை! கோலாலம்பூர்! மொரீஷியஸ்! தஞ்சை!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nice post
Post a Comment